எதிர்வரும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று (06) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் இதனை தெரிவித்தார்.
தங்களால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கச்சத்தீவில் சமர்ப்பிப்பதன் மூலம் தமது பதிவுகளைப் பக்தர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடற்போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நெடுந்தீவில் இருந்து கச்சத்தீவுக்கான கடல்மார்க்க ஒரு வழி போக்குவரத்து கட்டணமாக ஆயிரம் ரூபாவும், குறிகட்டுவானிலிருந்து ஒரு வழி போக்குவரத்து கட்டணமாக ஆயிரத்து 300 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப பயணம் செய்கின்ற படகுகள் பரிசோதனை செய்யப்பட இருக்கின்றன. உணவு தங்குமிட வசதிகள் கடற்படையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு பிரதேச சபை ஆகியன அந்த பணிகளில் பங்களிப்பு செய்யவுள்ளன.
பக்தர்கள் சரியான அறிவுறுத்தலை பின்பற்றி கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதன் மூலம் வீணான அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இந்த முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களும் இலங்கையிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
அந்தவகையில் குறித்த திருவிழாவுக்கு வருகைதரவுள்ளவர்கள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி எதுவித இடையூறுகளும் இன்றி கலந்து கொள்ளவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.








