கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த மே மாதம் ஒரு குப்பைக் கிடங்கில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இவை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போன இந்திய வம்சாவளியைக் கொண்ட பெண்ணின் எச்சங்களாக டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது பொதுச் சட்டத் துணைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் ஹாமில்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

40 வயதான ஷாலினி சிங், மனநலப் பணியாளராக பணியாற்றியவர், 2024 டிசம்பர் 10ஆம் தேதி அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
டிசம்பர் 4ஆம் தேதியன்று குடும்பத்தினருடன் பேசிய பின்னர், ஹாமில்டன் நகரில் உள்ள அவரது குடியிருப்பில் அவர் கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளில், சிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவரது உடல் கட்டிடத்தின் குப்பை அகற்றும் அமைப்பின் வழியாகக் குப்பைக்கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது போல சந்தேகிக்கப்படுவதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மே 21ஆம் தேதி அந்தக் குறிப்பிட்ட குப்பைக் கிடங்கில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
கனடா தடயவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட டி.என்.ஏ. சோதனையில் அவை ஷாலினி சிங்கின் எச்சங்களாக உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையிலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், பர்லிங்டனைச் சேர்ந்த 42 வயதான ஜெஃப்ரி ஸ்மித் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஷாலினி சிங்கின் பொதுச் சட்டத் துணைவராக இருந்தவராவார். அவர்மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் மனித எச்சங்களை அவமதித்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது சம்பந்தப்பட்ட நிலக் குப்பைக் கிடங்கில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 27ஆம் தேதிக்குள் தேடுதல் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.








