
காசா அமைதித் திட்டம்: டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் உடனிணைந்து பணியாற்றத் தயார் – பாலஸ்தீனத் ஜனாதிபதி!
உலக அமைப்புகளின் பெரும் ஆதரவுடன், காசா பகுதியில் நிலவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், இரு நாடுகள் தீர்வை முன்னெடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுவிழா கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றிய பாலஸ்தீன ஜனாதிபதி, காசா நிலைமை தொடர்பான அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
அமெரிக்கா, அப்பாஸுக்கு விசா வழங்க மறுத்ததாலேயே அவர் காணொளி மூலமாகவே உரையாற்றினார்.
அப்பாஸ் தனது உரையில், “ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்துள்ள எங்கள் மக்கள் சார்பில், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாதச் செயல்களை நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம். பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் செயல் எதுவும் பாலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை,” எனத் தெரிவித்தார்.
அவரது உரையில் மேலும், காசா பகுதி, பாலஸ்தீன அரசின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருப்பதையும், அங்கு ஆட்சி மற்றும் பாதுகாப்பிற்கான முழுப் பொறுப்பை ஏற்க அவர் தயாராக இருப்பதையும் தெரிவித்தார். ஹமாஸ் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இருப்பதற்கில்லை எனவும் வலியுறுத்தினார்.
“எங்களுக்குத் தேவை ஆயுதம் இல்லாத அரசாங்கம். அமைதி, ஒருமை மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகம்,” என அவர் கூறினார்.
சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐ.நா மற்றும் டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து, 21 அம்சங்களை கொண்ட அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த முயற்சிக்கு பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த முயற்சியில் பங்கேற்க மறுத்துள்ளன. இந்த மாதம், 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச் சபை, இரு நாடுகள் தீர்வை ஆதரிக்கும் ஏழு பக்க பிரகடனத்தை பெருமளவில் அங்கீகரித்தது.
எனினும், ஹமாஸ் அப்பாஸின் இந்த உரையை நிராகரித்துள்ளது. “ஹமாஸுக்கு ஆட்சியில் பங்கு இருக்கக்கூடாது” என்ற கூற்று, பாலஸ்தீன மக்களின் தேர்தல் உரிமையை மீறுவதாகவும், தங்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் உரிமையை புறக்கணிப்பதாகவும் ஹமாஸ் குற்றம்சாட்டியது.
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், அப்பாஸ் மேற்கத்திய நாடுகளுக்காக “நல்ல வார்த்தைகள்” பேசியதாக விமர்சித்து, அவர் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டதாக சாடினார்.
2023, ஒக்டோபர் 7 ஆம் திகதி, ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக நடத்திக் கொண்ட வந்த தாக்குதல், காசாவில் வன்முறையைத் தூண்டியது. இஸ்ரேலிய தரவுகளின்படி, அந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள். மேலும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
மாறாக, காசா மாகாணத்தின் உள்ளூர் சுகாதாரத் தரவுகளின்படி, போரின் போது 65,000க்கும் மேற்பட்டோர் — பெரும்பாலும் பொதுமக்கள் — கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.