காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய இந்தத் தாக்குதல், தற்போது மேலும் பல பகுதிகளுக்கு பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டும் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 65,062 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 165,697 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில், இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150-க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள், ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்திருந்த கூடார முகாம்களுக்கு அருகிலுள்ள உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியுள்ளன.

சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பல வைத்தியசாலைகளும் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், காசா நகரிலிருந்து தெற்குப் பகுதிகளுக்கு மக்கள் வெளியேறுவதற்காக, இஸ்ரேல் 2 நாட்களுக்கு புதிய வழித்தடம் ஒன்றைத் திறந்துள்ளது.

வாகனங்களிலும் கால்நடையாகவும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். தப்பிச் செல்லும் மக்கள், வான், கடல், நிலத்திலிருந்து தொடர்ந்து இடம்பெற்ற கடுமையான குண்டுவீச்சுகள் காரணமாக நகரம் முழுவதும் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன என்றும், கடந்த இரண்டு ஆண்டுப் போரில் இத்தகைய கடுமையான தாக்குதல்களை இதுவரை எதிர்கொண்டதில்லை என்றும் விவரித்துள்ளனர்.

இதற்கிடையில், சர்வதேச சமூகம் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக கட்டார் உள்ளிட்ட நாடுகள் தரைவழி தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன. மேலும், ஐ.நா நிபுணர்கள் குழு, இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here