இலங்கை கிரிக்கெட் சபையின் நிதிப் பிரச்சினைகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் சீர்திருத்தக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற பின்னர் தனது முதல் ஊடக சந்திப்பில் பேசிய விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிதிகளை ஆய்வு செய்ய தமது குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் சபையின் முந்தைய உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்த பின்னர், அந்த சபையை சீர்திருத்துவதற்காக அரசாங்கத்தால் எரான் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

அரசியல் தலையீடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) மீண்டும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற அச்சம் காணப்பட்ட நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையியல் புதிய குழுவுடன் சர்வதேச கிரிக்கெட் சபையுடனான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாகவும் வெளிப்படையாகவும் இருந்ததாக விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நிர்வாகச் சிக்கல்களைச் சீர்செய்ய ஒரு புதிய சட்டவரைவு உருவாக்கப்படும் என்றும் ஒரு குழு நீண்ட காலமாக கிரிக்கட் சபையை கட்டுப்படுத்துவதைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here