களனி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் சுமார் 300 மி.மீ. குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு களனி ஆற்றை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
களனி ஆற்றில் உயர்ந்து வரும் நீர்மட்டமானது, ஹங்வெல்ல, சீத்தாவக்க, டொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம, கடுவலை, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நில பகுதிகளைப் பாதிக்கக்கூடும்.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், வெள்ள அபாயம் உள்ள பாதைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (22) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த வெள்ள எச்சரிக்கை, ஞாயிறு (24) காலை 10.00 மணிக்கு முடிவடையும் வகையில் 48 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.








