கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் இதில் உறவினர் வீடுகளில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 6570 அங்கத்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதன் காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட பல விவசாயிகளின் நெற்பயிர்செய்கை வெள்ளத்தில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றது. அத்துடன் தற்பொழுது அதிகமான குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதாகவும் புகைமூட்டம் போல் காட்சி அளிப்பதுடன் வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
- கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்








