கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு அளவில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரதேச கமக்கார அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள் நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளி்டட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தும் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிறுத்தப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கனகாம்பிகைகுளத்தின் ஏ9 வீதியோடு உள்ள பகுதி மண் நிரப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது. 10 கொள்ளளவு கொண்ட இக் குளத்தினை நம்பி சுமார் 300 வரையான சிறுதானிய பயிர்ச்செய்கையாளர்கள் உள்ளனர். எனவே இவ்வாறு குளம் ஆக்கிரமிக்கப்படுவதான நிலைமையானது எதிர்காலத்தில் இக்குளத்தினை நம்பியுள்ள விவசாயிக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.
எற்கனவே இக்குளத்திற்குச் சொந்தமான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான நிலம் பொது மக்களால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்குச் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக குளத்தின் பல பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது இடம்பெற்றுள்ள குளத்தின் முக்கிய பகுதி ஆக்கிரமிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி கை.பிரகாஸ் அவர்கள் கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் பொலீஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு குறித்த குளத்தின் ஆக்கிரமிப்பை தடு்த்து நிறுத்துமாறு கடிதங்களை எழுதியுள்ளார். எனவே இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எம்.ஜெகூ அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








