எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான இணையவழி முறைமை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ‘P’ பிரிவின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளது.
இந்தத் தொகைக்கு கூடுதலாக, நவம்பர் மாத இறுதியில் 100,000 கடவுச்சீட்டுகளும் டிசம்பர் மாதத்தில் 750,000 கடவுச்சீட்டுக்களும் கிடைக்கப்பெறவுள்ளன.
மேலும், வெற்றுக்கடவுச்சீட்டுத் தொகையொன்றையும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கி வருகிறது.
அதன்படி, மேற்படி கையிருப்பு பெறப்பட்டதன் மூலம், இத்தொகையை டிசம்பர் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து, விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவைப் பொருத்தும் கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.








