மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும் 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 2 மில்லியன் ஆகும்.
மவுண்ட் லெவனியா பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு முதலில் 32 வயது நபரை அதே பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்தது.
அவரிடம் இடம்பெற்ற விசாரணையில், மெகசின் சிறையில் உள்ள ஒரு கைதி வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு போதைப்பொருள் பொதியை எடுக்குமாறு கூறியதாக அவர் தெரிவித்தார்.
அந்த பொதியை பொரல்லை பகுதியில் வேறொருவரிடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து பொலிஸார் அங்கு பொதியை பெற்றுகொள்ள வந்த நபரை சுற்றி வளைத்த போது, அவர் மெகசின் சிறை காவலர் என அடையாளம் காணப்பட்டார்.
குறித்த காவலர் 53 வயதான தங்காலை பெலியத்த பகுதியை சேர்ந்தவர் என்றும் வெலிக்கடை சிறையில் பணியாற்றிய அவர் ஜனவரி மாதம் மெகசின் சிறைக்கு இடமாற்றம் பெற்று வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
மவுண்ட் லெவனியா பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







