நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவால் கொண்டுவரப்பட்ட தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
சாதாரண ஒரு பிரஜைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாத சமூகமாவே மலையக மக்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
சுகாதாரம்,நீர்வசதி,வாழ்வாதாரம்,வீதியமைப்பு போன்றவை இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளதாக அம்பிகா சாமுவேல் சுட்டிக்காட்டினார்.
இதுவரை இருந்தவர்கள் தமக்கு கீழ் அமைச்சுகளை வைத்திருந்தாலும் எதனையும் செய்யவில்லை எனவும் வெறுமனே பாரபட்சம் மட்டுமே காட்டியதாகவும் சுட்டிக்காட்டினார்.
அம்பிகா சாமுவேல் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
“இந்தப் பிரேரணையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் 76 வருடகால ஆட்சியிலே, அவர்களுடைய ஆட்சிக்கு கீழ் தான் உரிய அமைச்சு காணப்பட்டது.
76 வருடங்களாக ஆட்சி செய்தவர்களுக்கு இந்த பாதைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் ,மலைய மக்களின் அபிவிருத்தி திட்டங்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை என்பதற்கு அவரே நிறையக் காரியங்களை முன்வைத்துள்ளார்.
அது அவருக்கும் தெரிந்திருக்கிறது.அதைக் குறித்து சந்தோஷப்படுகிறேன்.தேசிய நீரோட்டத்தில் மலையமக்களை இணைக்கும் செயற்பாட்டையே தற்போது எமது அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.
தங்களுடைய பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் செய்யாத விடயங்களை நாங்கள் செய்து வருகிறோம்.உதாரணமாக வெறுமனே 7 பேர்ச் காணியினை மாத்திரம் வழங்கி வீடுகளை கட்டிக்கொடுத்தார்கள் ஆனால் எங்களுடைய தேசிய மக்கள் சக்தி 5,400 வீடுகள் உரித்தோடு கூடிய அனைத்து விதமான உட்கட்டமைப்புடன் கூடிய வீடமைப்பு திட்டத்தை மலையக மக்களுக்கு வழங்க இருக்கிறோம்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்திலும் மலையக மக்களை புறம் தள்ளாமல் தற்போது அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் வீடுகளை புணரமைத்து கொடுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.இத்தனை வருடம் ஆட்சி செய்தவர்களை மக்கள் நிராகரித்தார்கள். நிராகரித்து தேசியமக்கள் சக்தி பிரதிநிதிகளை மக்கள் தமக்காக தெரிவு செய்தனர்.நாங்கள் சொன்னதை செய்வோம் என்று கூறி முடிக்கிறேன்.” என்றார்.







