சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கருத்துக்களை நிராகரித்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க.
உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்துள்ளார்.
சீனாவின் சின்ஹ_வாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் திசநாயக்க செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சீனாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமிது.
2004 இல் நான் முதல்தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டேன்,20 வருடங்களிற்கு பின்னர் திரும்பிவரும் நான் பாரிய மாற்றங்களை பார்க்கின்றேன் என திசநாயக்க தெரிவித்தார்.








