வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் சட்டவிரோத தொழிலாளர்கள் வாடி அமைத்து சட்டவிரோத தொழில்களான சுருக்குவலை,அட்டை,தொழில்களை செய்து வருவதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் சமாசம் கடற்தொழில் அமைச்சரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசதலைவர் த.தங்கரூபன் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று முந்தினம் (20.07.2024) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இடம்பெறும் சுருக்குவலை தொழிலை சட்டவிரோத தொழிலாளர்கள் சுண்டிக்குளம்வரை விரிவு படுத்தியுள்ளனர்.

ஐம்பதுக்கும் அதிகமான படகுகள் நாளாந்தம் சட்டவிரோத மீன்பிடிக்கு செல்வதாகவும் எப்போதாவது இருந்து விட்டு ஒரு சில படகுகளை கைது செய்வதும் அதில் சிலவற்றை விடுவிப்பதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதால் சட்டவிரோத தொழில்களை இன்னும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் பிரதிநிதிகள் அமைச்சரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இதன்போது உடனடியாக கடற்படை அதிகாரிக்கு அழைப்பெடுத்து அமைச்சர் விளக்கம் கேட்டதாகவும் உடனடியாக சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்

ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் பல வருடங்களாக இடம்பெறும் சட்டவிரோத தொழில்களை இலங்கை கடற்படையால் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருப்பது நகைப்பாக இருப்பதாக தெரிவித்த தங்கரூபன் ஐம்பது படகுகள் மீன்பிடிக்க சென்றால் அதில் ஒரு சில படகுகளை கைது செய்ததும் கடற்படையினர் கரைக்கு திரும்பிவிடுவதாகவும்,சுண்டிக்குளத்தில் தற்போதுவரை இடம்பெறும் சட்டவிரோத அட்டை தொழிலாளர்களை கடற்படை இதுவரை கைது செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here