முல்லைத்தீவு மாவட்டத்தில்  உள்ள 3 விளையாட்டு மைதானங்களை தேசிய தரத்திற்கு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

தெரிவு செய்யப்பட்ட மைதானங்களில் ஓடு தடங்கள், தடகள வசதிகள் மற்றும் ஏனைய நவீன உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கமகே, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

புவியியல் ரீதியான வேறுபாடுகள் இன்றி அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறினார்.

விளையாட்டுத்துறையின் அபிவிருத்தியை பரவலாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைவதாகவும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தரமான பயிற்சி வசதிகளை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேநேரம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் திலகநாதன் உரையாற்றுகையில், கடந்த பல தசாப்தங்களில் முல்லைத்தீவு இளைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் இதுவாகும் எனவும் இது ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஒழுக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்த உதவும் எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here