10 இலட்சம் ரூபாய் பணமும், நான்கரை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போனதாக கரந்தெனிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட எகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கரந்தெனிய காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கரந்தெனிய காவல்துறை பொறுப்பதிகாரியால் அவ்வாறு களவாடப்பட்ட பணம், அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த பணத்தையும், நகையையும் யாரோ திருடிவிட்டதாக முறைப்பாட்டளரின் மனைவி தனது கணவரிடம் கூறியுள்ளார்.

அது தொடர்பில் கரந்தெனிய காவல்துறைக்கு முறைப்பாடு செய்யுமாறு மனைவி தனது கணவருக்குத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன், காவல்துறையினர் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி வீட்டின் அறையொன்றிலிருந்துள்ளதுடன், இந்த வீட்டில் உள்ள “சூட்டி” எனும் பெயர் கொண்ட கிளி அந்த அறையின் திரைச்சீலையில் அமர்ந்திருப்பது வழக்கம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் வெளிநபர் யாரும் அந்த அறைக்குள் வர முடியாது எனவும், யாரும் அந்த அறைக்குள் நுழைந்தால் கிளி கீச்சிடும் எனவும், வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், காவல்துறை நாய் ஒன்றைக் கொண்டு பரிசீலனை செய்யும் போது அந்த நாய் வீட்டின் எஜமானியை இரு தடவைகளும் நாக்கால் நக்கியுள்ளது.

காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அதற்குச் சரியான பதில் வழங்காமையின் காரணமாகச் சந்தேகமடைந்து அவரால் இந்த பணம் திருடப்பட்டதாகவும் நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பணப்பை வீட்டின் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், காவல்துறை நாயின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்புவதற்காகப் பணமும் நகையும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆங்காங்கே மிளகாய்த் தூளை வீசியுள்ளார்.

அந்த மிளகாய்த் தூள் வீட்டிலிருந்த மிளகாய்த் தூள் போன்றது என காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது கணவரின் பணத்தைத் திருடுவதற்காகச் சந்தேக நபர் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here