இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்தது.
ஜப்பானில் உள்ள மியாஸாக்கி ((Miyazaki) விமான நிலையத்தில் புதைந்துகிடந்த அமெரிக்க வெடிகுண்டு நேற்று (02.10.2024) வெடித்ததால் 80 க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதனால் விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அடுத்துள்ள ரக்ஸிவே பகுதியில் ஏழு மீற்றர் (23 அடி) அகலமும் ஒரு மீற்றர் (3.2 அடி) ஆழமும் கொண்ட துளை உண்டானது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குண்டு வெடித்தபோது அருகில் விமானங்கள் எதுவும் இல்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின்போது அந்த பகுதியில் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் அங்குப் இருக்கலாம் என நம்பப்படுவதுடன் 230 கிலோகிராம் எடை கொண்ட அமெரிக்க குண்டு வெடித்ததை ஜப்பானின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு உறுதிசெய்துள்ளது.








