மாத்தறை, கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்சேகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கம்புறுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) காலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் மாத்தறை, ரன்சேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வீட்டின் பெண் உரிமையாளர் நபரொருவருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.
சம்பவத்தன்று, வீட்டின் பெண் உரிமையாளருக்கும் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வீட்டின் பணியாளரும் அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரும் இணைந்து தகராறில் ஈடுபட்ட இருவரையும் சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.
பின்னர், தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் வீட்டின் பெண் உரிமையாளரையும் பணியாளரையும் அயல் வீட்டில் வசிக்கும் பெண்ணையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த வீட்டின் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்த வீட்டின் பெண் உரிமையாளரும் அயல் வீட்டில் வசிக்கும் பெண்ணும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்புறுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








