உடப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகொலன்யா பகுதியில் மகனால் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (01/02/2025) பதிவாகியுள்ளது.
உடப்புவ, ஆதிமுன்னைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெரியகொலனியா பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் சுகவீனம் காரணமாக உடப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக உடப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்தியர் இது சந்தேக மரணம் என்பதால் நீதவான் விசாரணை தேவை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையில் உயிரிழந்தவரின் மரணம் ஒரு கொலையென்பதும், உயிரிழந்தவரின் மகன் உறங்கிக் கொண்டிருந்தவரின் மார்பில் கத்தியால் குத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் இறந்தவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அன்று அவரது சிகிச்சைகாக தந்தை வராததால் ஏற்பட்ட கோபத்தில் தந்தையை அவர் கத்தியால் குத்தியதாகவும் தெரியவந்தது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தைச் செய்த சந்தேகநபரான 20 வயதுடைய மனநலம் குன்றிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








