வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று மக்கள் வாழ முடியாத நாட்டை உருவாக்கியுள்ளதுடன், திட்டமிட்ட குற்றக்குழுக்களுக்கு கீழ்ப்படிந்த வாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சமூகம் இன்று கொடூரமான கொலை கலாசாரத்திற்கும், திட்டமிட்ட குற்றக்குழுக்களுக்கும் இரையாக்கப்பட்டுள்ளது.

சட்டம் அமல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. நாட்டில் சட்டம் அமுலில் இல்லை.

கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை மா அதிபரைக்கூட இந்த அரசாங்கத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையின் இயலுமை எவ்வாறானது என்பதை இவ்வாறானதொரு சூழ்நிலையை வைத்து ஊகிக்க முடிகிறது.

நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசும் போதும், கேள்வி எழுப்பும் போதும், தேசிய பாதுகாப்பில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கம் கூறிவருகிறது.

ஆனால் அண்மையில் தெவிநுவர பிரதேசத்தில்கூட இரட்டைக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

கொலைக் கும்பல்கள் எங்கும் பரவியுள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி, சந்தேகமின்றி வாழும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்குவோம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று வாழ முடியாத நாட்டை உருவாக்கி, திட்டமிட்ட குற்றக்குழுக்களுக்கு கீழ்ப்படிந்த ஓர் வாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here