தித்வா புயல் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கான கட்டமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறிப்பாக வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் குடியமர்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரசாங்க காணி அனுமதி பத்திரம் பெற்ற தனிநபர்களின் காணிகள் மீள்குடியமர்வுக்காக அடையாளம் காணப்பட உள்ளது.
அவ்வாறான சந்தர்பங்களில், அந்த காணியில் செய்யப்பட்ட அபிவிருத்திகளுக்கான பெறுமதி சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக அனுமதி வைத்திருப்பவருக்கு வழங்கப்படும்.
பின்னர் அதே வருமான பிரிவைச் சேர்ந்த வேறொருவருக்கு அந்த காணி சட்டப்படி மீண்டும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மீள்குடியமர்வுக்காக அரசுக்கு நன்கொடையாக வழங்கப்படும் தனியார் காணிகள் முதலில் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தானப்பத்திரம் மூலம் அரசுக்கு மாற்றப்படும்.
பின்னர் 1950 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க காணி அபகரிப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோராமல் இருப்பதற்கான பிரகடனத்தை நன்கொடையாளர்கள் வழங்க வேண்டும். இதன் மூலம் அரசு உரிமையை பதிவு செய்து மீள்குடியமர்வை முன்னெடுக்கும்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமாக பொருத்தமான காணி இல்லாத நிலையில், மேலே உள்ள ஏற்பாடுகளின் கீழ் அவர்களை குடியமர்த்த முடியாவிட்டால், அரசுக்கு சொந்தமான அல்லது நன்கொடையாக கிடைத்த காணிகளில் இருந்து 10 பேர்ச் வரையிலான காணித் துண்டுகள் ஒதுக்கப்படும்.
1947 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் பின்னர் அந்த காணியின் உரிமை வழங்கப்படும்.
அரச காணிகள் மாத்திரம் போதுமானதாக இல்லாத நிலையில், விவசாய, கால்நடை, காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உரிய நேரத்தில் மீள்குடியமர்த்துவதை நோக்கமாக கொண்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.








