இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
“100 க்கு 100” தேசிய கூட்டுறவு மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றிய அவர், மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பாரிய வீதி பாதுகாப்பு பிரச்சினையாக உள்ளதாகவும், அதற்கு விசேட நடவடிக்கைகள் தேவை என்றும் கூறினார்.
ஏனைய வாகனங்களில் இருந்து ரப்பர் தடுப்புகளால் பிரிக்கப்பட்ட இந்த வீதியின் வடிவமைப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா போன்ற நாடுகளில் பிரத்தியேக மோட்டார் சைக்கிள் வீதிகள் மூலம் விபத்துக்கள் பெருமளவில் குறைந்துள்ளதை முன்னுதாரணமாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
களுவாஞ்சிகுடியில் அதிகளவான மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் இருப்பதால் அந்த பகுதி பரீட்சார்த்த திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது வெற்றியடைந்தால் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
தேசிய வீதி பாதுகாப்பு சபை மற்றும் Hayleys Advantis Ltd இணைந்து ஏற்பாடு செய்த இந்த திட்டத்தின் ஊடாக 100 தனியார் நிறுவனங்கள் இணைந்து, ஒவ்வொரு நிறுவனமும் 100 மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








