திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் உருவான பதற்றநிலையை அடுத்து, மிஹிந்தலை இராஜ மகா விகாரையின் தலைமை விகாராதிபதி வளவாஹெங்குணாவெவ தம்மரத்ன தேரர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போதைய நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சமயத் துறவிகள் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவங்களுக்குப் பொறுப்பானது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசே என தேரர் நேரடியாக குற்றம்சாட்டினார்.
மேலும்“இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பௌத்த சாசனத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரித்தோம். இவர்களுக்கு வாக்களித்தவர்கள், இப்போது எதிர்கொள்ளும் நிலைமையைப் பார்த்து வருந்த வேண்டியதுதான்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கரகோட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தனது ஆழ்ந்த கவலைையை வெளிப்படுத்தியுள்ளார்.
1951 முதல் விகாரை இக்கட்டிடத்தில் இயங்கிவருவதோடு, 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் விசேட உத்தரவின் மூலம் கோவில் அதிகாரிகளுக்கு நில உரிமையும் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த பின்னணியில், அங்குள்ள நிரந்தர துறவிகள் நேற்று பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளானது வருத்தத்துக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







