ரயில்வே திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சுமேத சோமரத்ன கூறுகையில், தீவிரமான சமிக்ஞை கோளாறுகள் பல உள்ள நிலையில், அதிகாரிகள் தலைமன்னார் பாதையில் ரயில் சேவையை பாதுகாப்பற்ற முறையில் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் முதல் இந்த பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், இதுவரை அந்த பாதை அமைப்பின் சமிக்ஞைகளை முறையாக இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தற்போது மதவாச்சி மற்றும் தலைமன்னார் வரையிலான ஒற்றை ரயில் பாதையில் சேவைகள் ‘பைலட் முறை’யின் கீழ் நடைபெறுவதாகவும், பொதுவாக இதுபோன்ற பைலட் முறை, சமிக்ஞை கோளாறு போன்ற அவசர நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் தற்போது அதனை நிரந்தர சேவை முறையாக தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தலைமன்னார் பாதை தவிர மஹவ – அனுராதபுர பிரிவிலும் உள்ள சமிக்ஞை பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அங்கும் தற்காலிக சமிக்ஞை முறைகளின் கீழ் சேவைகள் நடைபெறுவதாக சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
கோடிக்கணக்கான மக்களின் பணத்தை செலவு செய்து புனரமைக்கப்பட்ட இந்த ரயில் பாதை தற்போது அழிவு நிலைக்கு சென்றுள்ளதாகவும் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
ரயில் நிலையங்களில் உள்ள இந்த சமிக்ஞை கோளாறுகள் மற்றும் பணி சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் உறுதியான தீர்வுகளை வழங்காவிட்டால்,நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். இது தொடர்பில் ஏற்கனவே அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம் எனவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.







