தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்த ஒரே ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று (18) இரவு உயிரிழந்த இந்த பெண் ஒட்டகச்சிவிங்கிக்கு சுமார் 30 வயது என குறிப்பிடப்படுகிறது.
உயிரிழப்பதற்கு முன்னர் இந்த ஒட்டகச்சிவிங்கி தொடர்பில் எந்தவித விசேட நோய் நிலையும் பதிவாகவில்லை. வயதானதன் காரணமாக ஏற்பட்ட இயற்கையான நிலைமையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக காடுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் ஆயுட்காலம் 20-25 வருடங்கள் ஆகும். ஆனால் மிருகக்காட்சி சாலை சூழலில் அதைவிட அதிக காலம் வாழ முடியும் என பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இன்று (19) மேலதிக பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மிருகக்காட்சி சாலை சூழலில் விலங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப சத்தான மற்றும் சமநிலையான உணவு வழங்குதல், சுத்தமான மற்றும் பொருத்தமான வாழ்விடங்களை பராமரித்தல், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தேவையான கால்நடை மருத்துவ சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றின் காரணமாக இந்த விலங்கு சுமார் 30 வருட கால நீண்ட ஆயுட்காலத்தை அனுபவிக்க முடிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம், விலங்கு நலன், மரபணு பல்வகைமையை பேணுதல் மற்றும் விலங்கு பாதுகாப்பை மேற்கொள்ளும் நோக்கில் செயல்படுத்தும் விலங்கு பரிமாற்ற திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு முடிவதற்குள் புதிய 2 ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை நாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.








