தலவாக்கலை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையில் வீதியில் செல்வதற்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்ட, 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.
பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள், லொறிகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உட்பட 40 வாகனங்கள் வீதி தகுதி தேவைகளை பூர்த்தி செய்கின்றனவா என்பதை அறிவதற்காக பரிசோதிக்கப்பட்டன.
நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.
பரிசோதிக்கப்பட்ட வாகனங்களில் 28 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதால் அவை தற்காலிகமாக இயக்க தடை செய்யப்பட்டன. அந்த வாகனங்களின் வருவாய் உரிமங்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டன.
வீதியிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்களில் 4 தனியார் பேருந்துகளும் 15 மூன்று சக்கர வண்டிகளும் அடங்கும்.
கண்டறியப்பட்ட குறைப்பாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்படும் வரை அந்த வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது என பண்டார கூறினார்.
வீதி விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இதே போன்ற வாகன பரிசோதனைகள் நுவரெலியா மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








