நாட்டின் பல பிரதான நதிகளின் நீர்மட்டம் உயர்ந்த மட்டத்தில் இருந்தாலும், இதுவரை எந்த நதியின் நீர்மட்டமும் வெள்ள அபாய நிலைக்கு உயரும் அபாயத்தை வெளிக்காட்டவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பல பிரதான நதிப்படுகைகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
கிங் கங்கையின் கீழ் பகுதியில், பத்தேகமவுக்கு அருகில் உள்ள சில இடங்களில் 125 மில்லிமீற்றருக்கு அருகில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களு கங்கையின் மேல் படுகையில் இரத்தினபுரி பகுதியில் 75 மில்லிமீற்றருக்கு அருகிலும், கீழ் படுகையில் கஸ்பாவைக்கு அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மகாவலி கங்கையின் மேல் படுகைக்கு உட்பட்ட பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலும், அம்பாறை கல் ஓயா படுகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கு அருகில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அனுராதபுர மாவட்டத்தில் சில இடங்களில் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், பெரும்பாலான நதிகளின் நீர்மட்டத்தில் தற்போது வேகமான உயர்வு காணப்படவில்லை என நீர்ப்பாசன பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஈர வலயத்தில் உள்ள கிங், நில்வளா, களு கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டங்கள் உயர்ந்த மட்டத்தில் இருந்தாலும், அவை தற்போது வெள்ள நிலைக்கு உயர்வதற்கான அறிகுறியைக் காட்டவில்லை.
எனினும், அந்த பகுதிகளில் மேலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைத்தால் வெள்ள நிலை ஏற்படும் நிலை இருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
“இந்த நாட்களில் கிடைக்கும் மழைவீழ்ச்சியின் தீவிரம் அதிகம் எனவும் குறுகிய காலத்திற்குள் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கிறது. இந்த நிலைமையின் கீழ் பிரதேச ரீதியாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் சாத்தியம் உள்ளது.” என பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.








