கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள சொத்து உடைமை ஒன்று தொடர்பாக போலி உறுதிப் பத்திரம் தயாரித்து கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதன் நிதி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் நேற்று (15) களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் ஆவார்.
விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாவது, சந்தேக நபர் குறித்த சொத்து தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் சமர்ப்பித்துள்ளார் என்பதாகும்.
குறித்த சொத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பண மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








