நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையாற்றும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அர்ச்சுனா தனது கருத்தில், நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் பின்னர் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கான உரையாற்றும் நேரம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு, ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்தவுடன் ஒலி அறிவிப்புடன் உரை நிறுத்தப்படும் நடைமுறை அமுலில் உள்ளதாகவும், இதேபோன்ற முறைமையை இலங்கை நாடாளுமன்றத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், இந்த முன்மொழிவை சபாநாயகரிடம் எடுத்துரைப்பதாகவும், உறுப்பினர்களின் உரையாற்றும் நேரத்தை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.








