விசேட தேவைக்குரியவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் நோக்கில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (21) தாழ்தள (Low-floor) பேருந்துச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அரசாங்கதத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த முன்னோட்டத் திட்டத்தில், சக்கர நாற்காலிப் பயனாளர்கள், பார்வையற்றவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் பேருந்தில் ஏறும் வகையில், விசேடமாக வடிவமைக்கப்பட்ட 10 தாழ்தளப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு பேருந்திலும், சக்கர நாற்காலிப் பயனாளர்களுக்கான பிரத்யேக இருக்கைகள் உட்பட 30 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தபேருந்து சேவையானது, இலங்கையின் தேசிய வைத்தியசாலை மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை போன்ற முக்கிய சுகாதார அமைப்புக்களை உள்ளடக்கி, மாகும்புர தொடக்கம் கொழும்பு கோட்டை மற்றும் மாகும்புர–கடவத்த வழித்தடங்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் இதுபோன்ற பேருந்துகள் இதற்கு முன்னர் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த திட்டமானது மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, அனைத்துப் பயணிகளுக்கும் வசதியையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வகையான மேலும் 122 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும், கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை நிகழ்வின் போது பயனாளிகள் சேவைத் தகவல்களை எளிதாக அணுகுவதற்கும், போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கும், LMT GO என்ற மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.








