பாரிய அளவான கொக்கெய்ன் கடத்தலை மேற்கொள்ள முயன்ற ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டாவைச் சேர்ந்த 47 வயதான பெண் சந்தேக நபர், தோஹா வழியாக உகாண்டாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் (QR664) ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார்.
உளவுத் தகவல் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சோதனையில் அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கொக்கைன் மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றின் மொத்த எடை 274 கிராம் ஆகும். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 12.33 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அந்தப் பெண் மேலும் கொக்கைன் மாத்திரைகளை விழுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்க மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக நடவடிக்கையானது , தமது உளவுத்துறை அடிப்படையிலான செயல்பாடுகள் மற்றும் நுழைவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கடுமையான கண்காணிப்பின் வலிமையைக் காட்டுகிறது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.







