ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV) தனக்கு “ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு பயமில்லை” என்றும் போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இன்று (13) அல்ஜீரியாவுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய போப் லியோ (XIV), தான் அரசியல் விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், ஆனால் அமைதியையும் அமைதிக்கான கலந்துரையாடல்களையும் தொடர்ந்து ஊக்குவிப்பேன் என்றும் கூறினார்.
“நான் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு அஞ்சவில்லை. நான் நற்செய்தியைப் பற்றிப் பேசுகிறேன், நான் அரசியல்வாதி அல்ல,” என்று கூறிய போப், தொடரும் மோதல்களால் ஏராளமான மக்கள் துன்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஈரானில் இடம்பெறும் அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு போப் லியோ எதிர்ப்பு தெரிவித்ததையும், அமைதியான உரையாடலுக்கு அழைப்பு விடுத்ததையும் தொடர்ந்து, அமெரிக்காவில் பிறந்த போப்பாண்டவரை “பலவீனமானவர்” என்றும் “வெளியுறவுக் கொள்கைக்கு மோசமானவர்” என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்த நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மோதல் தீவிரமடைவது குறித்து மீண்டும் மீண்டும் எச்சரித்து வரும் போப் லியோ, தனது நிலைப்பாடு, அரசியலில் வேரூன்றியதல்ல, மாறாக திருச்சபையின் அமைதி மற்றும் பலதரப்பு கலந்துரையாடல் செய்தியில் வேரூன்றியுள்ளது என்று வலியுறுத்தினார்.
விமர்சனங்கள் இருந்தபோதிலும், போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும், இராஜதந்திரத் தீர்வுகளை முன்னெடுப்பதாகவும் போப் கூறியுள்ளார். மேலும், “உலகில் ஏராளமான மக்கள் இதனால் துன்பப்படுகிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.







