மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது இம்மாதத்துடன் முடிவடையும் இலையுதிர் கால மலையேறும் பருவத்தின் மிக மோசமான சம்பவமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மனாங் மாவட்டத்தில் உள்ள 7,126 மீட்டர் (23,379 அடி) உயரமுள்ள ஹிம்லங் இமால் மலையின் அடிவார முகாமில் நேபாள தொழிலாளர்கள் கூடாரங்கள் அமைத்து கயிறுகளை சரி செய்து கொண்டிருந்த போது வார இறுதியில் குறித்த பனிச்சரிவு முகாமை மூடியது. மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதுவரை அந்த இடத்திலிருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய மலை வழிகாட்டிகள் சங்கத்தின் (NNMGA) தலைவர் துள் சிங் குருங் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை பனிக்கு அடியில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டன, ஏனைய ஏழு உடல்கள் இந்த வார தொடக்கத்தில் மீட்கப்பட்டன.

“இன்று மீட்கப்பட்ட உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குருங் ஊடகத்திடம் தெரிவித்தார்.

காணாமல் போன ஒரு தொழிலாளியைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

பனிச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் வெளிநாட்டு மலையேறுபவர்கள் அந்த இடத்தை அடைந்திருக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நேபாளத்தின் மலைகளை பார்வையிட அல்லது ஏறுவதற்காக அங்கு வருகிறார்கள், இது வழிகாட்டிகள், சுமை தூக்குபவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், சுற்றுலா தொடர்பான வேலைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.

எனினும், காலநிலை மாற்றம் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவதை துரிதப்படுத்துவதால், இந்த தொழில்துறை முறையில் ஆபத்தானதாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here