இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரி விதிக்க முடிவு செய்தமையை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (EASL) வரவேற்றுள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா என்ற இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையில் இலங்கை பொருட்களின் போட்டித்தன்மையை பாதுகாக்க முடியும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர் முன்மொழியப்பட்ட மிக அதிகமான தீர்வைகளுடன் ஒப்பிடும்போது 10% வரி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றும், இது இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக உறுதித்தன்மையை வழங்கும் என்றும் சங்கம்  கூறியுள்ளது.

பங்காளதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் கம்போடியா  உள்ளிட்ட முக்கிய போட்டி நாடுகளுக்கு சமமான நிலையில்  இந்த வரி இலங்கையை வைக்கும் என்றும் குறிப்பாக இலாப விகிதம் குறைவான ஆடைத் துறைக்கு இது மிகவும் முக்கியமானது என்றும்  கூறியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளுக்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அந்தத் துறையை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி, சந்தை அணுகலை மேம்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச வர்த்தக கொள்கைகள் மிக வேகமாக மாறக்கூடியவை என்பதால், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய வர்த்தக சூழல் அவசியம் என்றும் ஏற்றுமதியாளர் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here