திருகோணமலை – சேருநுவர கல்விப் பிரிவுக்குட்பட்ட சேருவில கவுந்திஸ்ஸ ஆரம்பப் பாடசாலைக்கு யானையொன்று இன்று (27) பிற்பகல் வருகை தந்துள்ளது.
மதியம் 11.45 மணியளவில் பாடசாலையின் வகுப்பறையில் உள்ளே புகுந்தமையினால் மாணவர்கள் பெரும் பதற்றத்தில் காணப்பட்டுள்ளனர்.
மேலும், யானை வெளியேறும் வரை பாடசாலை மாணவர்களை ஒரே வகுப்பறைகளில் வைத்திருந்ததுடன், ஆசிரியர்களும் விரைந்து செயல்பட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
சேரு ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த யானைகளில் இந்த ஒற்றை யானை திடீரென பிரதான நுழைவாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்ததால் மாணவர்கள் அலறியடித்ததால் மாணவர்களை வகுப்பறைகளில் தங்க வைத்து பத்திரப்படுத்தியதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
யானை பிரதான வாயிலுக்குள் நுழைந்து பாடசாலையின் பின்புறமுள்ள வேலியினூடாக காட்டுக்குள் சென்றதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பாடசாலைக்கு தற்காலிக மின்வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இதன்காரணமாக பாடசாலைக்கு தொடர்ந்து யானைகள் அச்சுறுத்தல் உள்ளதாகவும் இதனால் மாணவர்களுக்கு மேலதிகமாக கற்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.








