கொழும்பு, பொரல்லை மயான வட்டாரம் அருகில் பாதசாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஜீப் வாகன சாரதி ஒருவரை பொரல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அப்போது மயான வட்டாரம் அருகில் உள்ள பாதசாரி கடவையில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த போது இரண்டு பாதசாரிகள் வீதியை கடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராஜகிரியவில் இருந்து மயான வட்டாரம் நோக்கி பயணித்த ஜீப் வாகனத்தின் சாரதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, சாரதி வாகனத்திலிருந்து இறங்கி ஒரு பாதசாரியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொரல்ல பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனத்தின் சாரதியை நேற்று (21) நண்பகல் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய பொரல்லை பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், அவர் கஞ்சா பயன்பாட்டிற்கு அடிமையாகி இருப்பதாக வைத்திய அறிக்கை கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இன்று (22) புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொரல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







