பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த மதில் சுவர் இடிந்து விழுந்ததில், அதற்குள் சிக்கிய 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இன்று (21) பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை பாங்கியாவத்தை குப்பை மேடு முன்பாக அமைந்துள்ள வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த மதில் சுவரே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அல்மினாரா வித்தியாலயத்தில் 2 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்த செல்வராஜ் ரவிந்து ரக்ஷான் என்ற மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தாயார் முற்றத்தை கூட்டி குப்பைகளை அகற்றி விட்டு மீண்டும் வந்த போது, மதில் சுவருக்குள் சிக்கியிருந்த தனது மகனை கண்டுள்ளார்.
அதன் பின்னர் சிறுவன் உடனடியாக முச்சக்கர வண்டியில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அப்போது அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் உடல் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நாளை (22) நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








