உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்படும் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியுள்ளது.
இந் நிகழ்வு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம்” என்ற தலைப்பில் 2025, கார்த்திகை 25 ஆம் திகதி தொடங்கி மார்கழி 10 ஆம் திகதி வரை இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (24.11.2025) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் தலைமையில், யாழ் சமூக செயற்பாட்டு மைய நிறைவேற்று அலுவலர் திரு. ந. சுகிர்தராஜ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கினார். அதே நேரம், அரசாங்க அதிபர் சிறு உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்ட செயலர் செல்வி உ. தர்சினி, பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திருமதி. கி. தயாபரி மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று (25.11.2025) கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலகங்களில் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு திரு. ந. சுகிர்தராஜ் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி, இப்பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இப்பிரச்சாரம் 16 நாட்கள் தொடர்ந்து, மார்கழி 10 ஆம் திகதி வரை நடைபெறும்.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)







