2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது என்று ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஏற்றுமதிகள் 6% நிலையான வளர்ச்சி காண்பித்ததாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது அதிகம் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சுங்கத்துறை தரவுகளின்படி, இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதிகளின் மதிப்பைச் சேர்த்து, மொத்த ஏற்றுமதி வருவாய் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது, ஒரு ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருவாய் 14 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியதையும் அடையாளப்படுத்துகிறது, இது இலங்கைக்கு முதல் முறையாக நிகழ்ந்தது.
மேலும், இதே காலகட்டத்தில் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி முதல் முறையாக 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








