பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விரைவில் பொதுமக்கள் கருத்து கோரப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் சுற்றுலாத்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கான ஒதுக்கீட்டின் மீதான நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
நாட்டில் புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் குறித்து செயல்படும் 14 விசேட நிபுணர் குழுக்கள் தற்போது பணியில் உள்ளன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சட்ட வரைபு விசேட நிபுணர் குழுவினால் இறுதி கையளிப்பு செய்யப்பட்டு, தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதன் பின், மக்கள் கருத்து பெறும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டார்.







