புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக உலக சந்தையில் இலங்கைக்கான பங்கை அடைய முடியும் எனவும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான வணிகமயமாக்கல் அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயல்முறை நாட்டின் பொருளாதாரத்தை எழுச்சி பெறச் செய்து, ஒட்டுமொத்த மனித மற்றும் சமூக வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும்.

நாட்டில், புத்தாக்க திறன் கொண்டவர்கள் கிராமிய அளவில் உருவெடுத்தாலும், அவர்களின் யோசனைகள் மற்றும் ஆக்கங்களை உள்வாங்குவதற்கு   அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.

இந்த மனித வளத்திற்கு சுதந்திரமாக சிந்திக்க தேவையான சூழலை உருவாக்குவதன் ஊடாகவும், அவர்களின் புதிய யோசனைகளை சிறந்த பொறிமுறையின் ஊடாக பெறுவதன் மூலமும் இலங்கையை எதிர்காலத்தில் ஒரு புத்தாக்க மையமாக மாற்ற முடியும்.

இதுவரை, வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியில் 0.12 சதவீதத்துக்கும் குறைவான அளவே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தாலும், அவற்றின் முறையான முகாமைத்துவம் மற்றும் பெறுமதியான ஆராய்ச்சி என்பன இன்னும் பொருளாதார பிரதிபலன்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here