நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் விதை மூலதனத்தை வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் நேற்றைய தினம் குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாக்கத்தை அங்கீகரிக்கும் நோக்கில் “விகமானிக ஹரசர” முயற்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் நடைபெற்றது.
இதற்கமைய இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதற்காக, வடமேற்கு மாகாணத்தில் தொடங்கி நாடு முழுவதும் “விகமானிக ஹரசர” நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குருநாகல், புத்தளம், அநுராதபுரம், மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000 புலம்பெயர்ந்தோர் இந்த முயற்சியில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் தமது சேவையை முடித்துக் கொண்டு கௌரவத்துடன் வாழ்வதை உறுதிப்படுத்தும் திட்டங்களை அறிவித்தார். நாட்டின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது அன்னியச் செலாவணிக்கு அவர்கள் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
“கூடுதலாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாம் மாற வேண்டும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும், சுற்றுலாவை அதிகரிக்க வேண்டும். இந்த புதிய அணுகுமுறை நமது நாட்டை மேலும் வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும்.
மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு ஊழியர்களால் இலங்கை ஒரு நாடாக வலுவாக நிற்க முடிந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில்முனைவோராக மாறுவதற்கு தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








