2021 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கு சமமான இலங்கையின் நிதி சரிசெய்தல், வரலாற்று மற்றும் சர்வதேச அளவுகோல்களில் விதிவிலக்காகப் பெரியது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
“இலங்கை பொது நிதி மதிப்பாய்வு: சமநிலையான நிதி சரிசெய்தலை நோக்கி” என்ற தலைப்பிலான தனது சமீபத்திய அறிக்கையில், பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல், நிதி ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் இலங்கை முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஆனால், கூர்மையான நிதி சரிசெய்தல் மறைமுக வரிகள் மற்றும் குறைந்த பொதுத்துறை ஊதியங்கள் மூலம் வீடுகளுக்கு சுமையைக் கொண்டுவந்ததுடன், பொதுமுதலீடு சரிவு காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்தது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை, நிதிக் கொள்கையை மறுசீரமைத்து வருவாய், சமநிலை மற்றும் வளர்ச்சிக்கிடையேயான சமநிலையைப் பேண வேண்டும் எனவும், முக்கிய கடன் இலக்குகளை அடையும் வண்ணம் செயல்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி, 2029க்குள் GDP-யின் கூடுதலாக 1.5 முதல் 2 சதவீத வருவாய் ஈட்டும் திறன் இலங்கைக்கு உள்ளது எனவும், இது சமத்துவத்தையும் வளர்ச்சியையும் பாதிக்காமல் சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்காக, நேரடி வரிகளை அதிகரித்தல்.வரி நிர்வாகத்தை நவீனமயமாக்கி டிஜிட்டல் மயமாக்குதல். வரி செலுத்துவோரின் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவை அவசியம் என அறிக்கை பரிந்துரைக்கிறது.
செலவு பக்கத்தில், ஊதிய நிர்வாகத்தை மேம்படுத்துதல், சமூக உதவியைச் சரியான தரப்புகளுக்கே சென்றடையச் செய்வது, மற்றும் உள்கட்டமைப்பு இடைவெளிகளை நோக்கி முதலீடுகளை மறுசீரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.








