போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு மத்தியில், சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிராக அணிதிரண்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸவில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பெற்றோர்களும் மக்களும் நீதித்துறை மீது அதிக நம்பிக்கையுடன் செயல்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு குற்றம் நடந்த உடனேயே அதற்கான தண்டனைகள் வழங்கப்பட்டால் அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என வலியுறுத்தினார்.
வழக்குகளை ஒத்திவைக்கும் செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் குற்றவாளிகளுக்கும் வழக்குகளில் சிக்கியுள்ளவர்களுக்கும் சட்டத்தின் மீதான பயம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்ற கருத்து இருந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவரைக் கூட நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
தற்போதைய ஆட்சியின் கீழ் சட்டத்திற்கு மேலே எவரும் இல்லை என்றும், ஜனாதிபதி, அமைச்சர்கள் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் உறுதிப்படுத்தினார்.







