சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் பரப்பி அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிப்பதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிகம மற்றும் அருகம்பை பகுதிகளில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறிப்பாக வெலிகம பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டவரை தாக்குவது போன்ற காணொளியும் அருகம்பை பகுதியில் சுற்றுலாபயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த தாக்குதல் சம்பவம் 2024ம் ஆண்டு நடைபெற்றதாக விசாரணைகளில் தெரியவந்த்தாக அமைச்சர் சுட்டிகாட்டியிருந்தார்.
அதே போன்று அருகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதெனவும் அமைச்சர் சுட்டிகாட்டினார்.
பொது இடத்தில் நிர்வாணமாக நடந்து சென்றமைக்கே அருகம்பை பகுதியில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்ப்பு வெளியிட்டதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் இவ்வாறு தகவல்கள் பரவி வருவதாக பிரதி அமைச்சர் கவலை வெளியிட்டார்.
அரசாங்கத்தை பலவீனப்படுத்த திட்டமிட்டு செய்யப்படும் ஒரு செயற்பாடாக உள்ளது எனவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செய்ற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
இதேவேளை போலித்தகவல்களுக்கு அஞ்சவேண்டாம் எனவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








