மட்டக்களப்பு ஓட்டுமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட ஒருவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தகாத வார்த்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த கட்சி ஒன்றி வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை 26 ம் திகதி பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் உதவி ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பில் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
108 வருடம் கொண்ட பாடசாலை வழமைபோல காலை ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் மற்றும் காலை கூட்டம் இடம்பெற்றும் அப்போது பிந்திவரும் மாணவர்களை காலைக்கூட்டம் முடியும்வரை நிறுத்தி வைப்பது வழமையானது.
இந்த நிலையில் சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை காலை பாடசாலை ஆரம்பித்து காலைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குறித்த நபர் அவரது பிள்ளையை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு பிந்தி வந்த மாணவர்களை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது அங்கு பிந்தி சென்ற அவரது பிள்ளையை உள் செல்ல வேண்டும் என பாடசாலை வளாகத்தினுள் அத்துமீறி உள் நுழைய முற்பட்ட போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களை தகாத வார்த்தை பிரயோகித்து தான் கட்சி ஒன்றின் வேட்பாளர் என தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாடசாலை கல்வி நடவடிக்கைக்கு அச்றுத்தல் விடுத்த உலக்கை றபீக் என அழைக்கப்படும் வேட்பாளருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் மாவட்ட தேர்தல் உதவி ஆணையார் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்புக்கும் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








