வவுனியா நீதவான் நீதிமன்றம், அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை விட முழு இரத்த பரிசோதனை (FBC) க்கு அதிக கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 5,00,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், வவுனியா மாவட்ட விசாரணை அதிகாரிகளால் இந்த சட்ட நடவடிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து அதிகாரிகள் ஜூலை 14 அன்று மேற்கொண்ட விசேட சோதனையில், வவுனியாவில் (Hospital Road) அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை, FBC இரத்த பரிசோதனைக்கு 550 வசூலித்துள்ளமை தெரியவந்தது.
இதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும்.
இந்த வழக்கு ஜூலை 28 அன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு ரூ. 5 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ பரிசோதனை நிலையங்கள் தொடர்பில், பொதுமக்கள் அலுவலக நேரத்தில் 1977 என்ற இலவச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.








