‘‘மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில், அது சட்டரீதியான ஆவணமாகும்’’ என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் முன்வைத்த கடந்த அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் பேசுகையில்,
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான எமது அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் எவற்றையும் வழங்கவில்லை வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களில் பெரும்பாலானவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டவையாகும்.
அத்துடன் அவ்வாறு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது.
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் சட்டரீதியில் வழங்கப்பட்டுள்ளதனால் அது சட்டரீதியான ஆவணமாகும். அரசியல் ரீதியில் விருப்பமில்லாவிடினும் அதனை இரத்துச் செய்வது சட்ட ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்தும்.
அரசாங்கத்துக்கு பலவந்தமான முறையில் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய முடியாது. இவ்வாறான பழைய குப்பைகளை கிளீன் செய்யவே முயற்சிக்கிறோம் என்றார்.








