மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திடமிருந்து கிடைக்கும் பதிலின் ஊடாக, அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான நடவடிக்கை குறித்து, ஜனாதிபதியால் ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுடன் அந்த கால அவகாசம் நிறைவடைந்தது.
இந்த காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, எரிசக்தி அமைச்சிடம் எமது செய்தி சேவை வினவியபோதே, அமைச்சின் செயலாளர் அது குறித்து பதில் வழங்கினார்.
விடயம் தொடர்பில் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அந்தப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொகுப்பாகக் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை தொடர்பான எரிசக்தி அமைச்சின் பரிந்துரைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார்.








