மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(11) காலை 9.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
பேரணி முடிவில் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கும், எமது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு,மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)








