மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒருசில டீக்களை தயாரித்து குடிப்பதே சிறந்த வழி. அதுவும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளைக் கொண்டு டீ தயாரிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும். இப்போது மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த மாதிரியான தேநீரை குடிக்கலாம் என்பதை இந்த பதிவில் காண்போம்.

இஞ்சி டீ

அனைவரது வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட இஞ்சியைத் துருவி கொதிக்கும் நீரில் சேர்த்து, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

துளசி டீ

துளசி அதன் மருத்துவ குணங்களுக்காக ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. துளசியில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இருப்பதால், இந்த துளசியைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, சுவாச ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதற்கு கொதிக்கும் நீரில் ஒரு கையளவு துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

மசாலா டீ

 

மசாலா டீ மழைக்காலங்களில் குடிக்க ஏற்ற அற்புதமான பானம். மசாலா டீயில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு போன்ற உடலுக்கு இதமளிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இருப்பதால், இந்த டீயை மழைக்காலத்தில் குடித்து வந்தால், செரிமானம் மேம்படும், சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

புதினா டீ

 புதினா டீ மழைக்காலத்தில் புத்துணர்ச்சி அளித்து, உடலை இதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆய்வு ஒன்றின் படி, புதினாவில் உள்ள பண்புகள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும், தலைவலியைக் குறைக்கவும், நெஞ்சில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது. முக்கியமாக இந்த புதினா உடலை மட்டுமின்றி, மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதற்கு கொதிக்கும் நீரில் சிறிது புதினா இலைகளை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

லெமன்கிராஸ் டீ

 லெமன்கிராஸ் டீயின் சுவையானது சிட்ரஸ் ப்ளேவரைக் கொண்டிருக்கும் மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். குறிப்பாக இந்த டீ செரிமானத்தை சரிசெய்யும், மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன. இப்படிப்பட்ட லெமன்கிராஸ் டீயை மழைக்காலத்தில் குடித்து வருவது மிகவும் நல்லது. இந்த டீயைத் தயாரிப்பதற்கு கொதிக்கும் நீரில் சிறிது லெமன்கிராஸ் இலைகளை கிள்ளிப் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here